பரியங்க யோகம்

பரியங்க யோகம் பாடல் எண் : 1 பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காசக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே. பொழிப்புரை : யோகி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடினானாயினும், அவனது மனம் பிரமந்திரத்திலே நிற்கும் ஆதலின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும்.) குறிப்புரை : `புலர்த்திய, சாத்திய` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `காசக்குழலி` என்னும் ஒரு பெயர் கொண்டன. காசம் - மயிர்ச்சாந்து. `கலந்தும்` என உம்மையை மாற்றியுரைக்க. ஊசித் துளை, பிரம ரந்திரம். தூங்குதல், மேலிடல். இதனால், பரியங்க யோகம் ஆமாறு கூறப்பட்டது. பாடல் எண் : 2 போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந் தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே. பொழிப்புரை : போகத்தில் மனம் சென்றவழிப் பிராணன் சுழு முனை வழியில் செல்லமாட்டாது. காமத்தை விளைக்கின்ற வெண்பாலும் செம்பாலில் வீழ்ந்தொழியும், ஆகவே, துணைவியும், துணைவனும் ஆகிய இருவரும் தங்கள் செ...