பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்:
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம் செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் அதை யோக ஜாதகம் என்கிறோம். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி இருந்தால் அதை தோஷ ஜாதகம் என்கிறோம்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டகரமானதாகிவிடும். பெண்ணின் ஜாதக ரீதியாக எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருந்தால் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டாகின்றன என பார்ப்போம்.
செவ்வாய் தோஷம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயானவர் குடும்ப ஸ்தானமான 2லும், சுக ஸ்தானமான 4 லிலும், களத்திர ஸ்தானமான 7லும், மாங்கல்ய ஸ்தானமான 8லும், கட்டில் சுக ஸ்தானமான 12லும் அமைவது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இப்படி தோஷம் அமைந்துள்ள பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்த்து திருமணம் செய்வது நல்லது. 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போதுமானதாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
ராகுகேது தோஷம்
செவ்வாய் தோஷம் பலருக்கு தெரிந்திருக்கிறது என்றாலும் அதைவிட கடுமையான தோஷமானது ராகு கேது தோஷமாகும். சர்ப கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 1,7 மற்றும் 2,8 ல் இருந்தாலும், 7,8 ம் அதிபதிகள் ராகு, கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும், ராகு கேதுவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ராகு கேது தோஷம் உண்டாகிறது. திருமண வயதில் ராகு கேதுவின் தசா புக்திகள் நடைபெற்றாலும், ராகு கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், சர்ப தோஷம் உண்டாகி திருமண சுபகாரியங்களில் தடை ஏற்படும். இந்த தோஷம் அமையப் பெற்ற பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்ப்பது நல்லது.
ராகுகேது தோஷம் அமையப் பெற்றவர்கள் திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலங்களில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயங்களுக்குச் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
புத்திர தோஷம்
புத்திர பாக்கியம் என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான வரப்பிரசாதம் ஆகும். குழந்தை இல்லாதவர்களை மலடி பட்டம் கொடுத்து எந்தவொரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5ம் பாவமும், 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானம் என்பதால் அதில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதுவே 5.9ம் வீட்டில் ராகு, கேது, சனி, புதன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்று பகைப் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படுகிறது.
பெண்களின் மணவாழ்க்கையும், கேது பகவானும்
திருமண வயதை அடைந்தவர்களுக்கு ராகு, கேதுவின் தசா புத்திகள் நடைபெற்றால் மணவாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அதிலும் கேது ஞான காரகன் என்பதால் கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண மானவர்களுக்கு கூட இந்த கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெறுமேயானால் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட தடைகள் ஏற்படும். குறிப்பாக கட்டில் சுக வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிப்படையும். இதற்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
மாங்கல்ய தோஷம்
பெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8 ம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் 8ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இடையூறு உண்டாகும்.
கற்பு:
கற்பு:
கற்பு என்பதுஆண், பெண் இருவருக்கும் சமமானதே. ஆனால் அக்காலம் முதல் இக்காலம் வரை கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள். ஒழுக்கமான நடத்தை, நல்ல பண்பு, மற்றவர்களிடம் அதிகமாக பேசாத குணம் போன்றவை உள்ளவர்களையே கற்புள்ளவர்களாக எண்ணுகிறார்கள். தற்போதுள்ள கால சூழ்நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதென்பது சகஜமாகி வருகிறது. கல்லூரியிலோ, பள்ளியிலோ பயிலும் ஆண், பெண் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது, உணவு உண்பது என்பது சகஜமாக மாறி வருகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அனைவரையும் கற்பிழந்தவர்களாக கூறிவிட முடியுமா?
குறிப்பாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 4ம் பாவம் பாதிக்கப்பட்டாமல் சுபர்சேர்க்கை பார்வையுடன் இருக்குமாயின், அவளின் கற்புக்கு எந்த பங்கமும் சேராது.
அதுவே 4ம் பாவமானது பாதிக்கப்பட்டிருந்தால் தேவையற்ற நட்புகள் தேடிவரும். இதனால் கெட்ட பழக்க வழக்கங்கள் முளைக்கும். பெயர் கெடும். வாழ்வில் பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். கற்பிழந்தவள் என்ற முத்திரையுடன் வாழ வேண்டியிருக்கும். இதனால் அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் பாதிப்புகள் உண்டாகும்.
பொதுவாக, பெண்கள் நாட்டின் கண்கள் என்பதால் ஒரு பெண்ணானவள் ஒழுக்க நெறியும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டிருந்தால் நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது. அதற்காக அடுக்களையில் அடைந்து கிடக்க வேண்டும் என்பதில்லை. புலியையே முறத்தால் அடித்து விரட்டியவள் பெண் என்பதால், துணிவு, தைரியம் யாவையும், பெற்றிருத்தல் அவசியம். கெட்ட பழக்க வழக்கங்களைத் தவிர்த்து குடும்பத்திற்கு குல விளக்காகத் திகழ்வதால் அனைவரும் போற்றக்கூடியவளாக வாழ முடியும்.
பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.
குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.
ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும் சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.
நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.
4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.
சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.
4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது. 4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.
நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல் அமைவதோ, 4ம் வீட்டைப் பார்வை செய்வதோ, 4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2,3 பவகிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்.
Comments
Post a Comment