தீர்க்க சுமங்கலி:

           சுமங்கலியாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் நாட்டு பெண்கள் குளித்து மஞ்சள் பூசி, நெற்றி திலகமிட்டு நடப்பதே மிகவும் அழகுதான். பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும். வயதாகியும் சுமங்கலியாய் இருப்பவர்களை எந்தவொரு மங்களகரமான சுபகாரியங்களிலும் முதன்மையாக நிறுத்தி சுப காரியங்களைத் தொடங்குவார்கள்.
ஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும். 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.

எல்லா பெண்களுமே தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான்  இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படாமல் வாழமுடியும். ஆனால்  சில பெண்களுக்கு நீண்ட சுமங்கலி பாக்கியம் உண்டாவதில்லை. வயதாகி கணவரை இழக்கும் பெண்களை பரவாயில்லை நன்றாக வாழ்ந்தாகிவிட்டது என ஏற்றுக்கொள்ளும் இ வ்வுலகம், இளம் வயதில் கணவரை இழந்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதி ஒதுக்கியும் வைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சினைகளை வெளியே  சொல்லவும் முடியாமல் மனம் விட்டு அழவும் முடியாமல் எத்தனை பெண்கள் வீட்டுக்குள் அடங்கி கிடக்கிறார்கள் தெரியுமா?

ஏன் இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அவலநிலை என ஜோதிட ரீதியாக ஆராயும்போது, தோஷமுள்ள பெண்ணிற்கு தோஷமுள்ள வரனாக அமைத்து கொடுக்காததுதான். தோஷமுள்ள ஜாதகம் என பார்க்கின்றபோது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8 ம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை  ஏற்படுத்துகின்றது.

7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு  இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.

எனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

பெண்களுக்கு மறு மணம் என்பது கனவாக இருந்த காலங்கள் மாறி கைம்பெண்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தரக்கூடிய நல்ல மனதுள்ள ஆண்ஙகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே பெண்களே சென்றதை நினைத்தே உங்களை வருத்திக் கொள்ளாமல் ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

கணவர் எப்படிப்பட்டவர்?

பெண்ணின் வாழ்வில் எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் என்ற உறவின் மூலமே சமூகத்தில் பெருமையடைகிறாள். பெண்ணின் உடல்ரீதியான உணர்வுகளுக்கும் சிறந்த வடிகாலாக விளங்குவது கணவன் என்ற பந்தமே. பிறந்த வீட்டில் எவ்வளவு பாசமாக வளர்ந்திருந்தாலும் திருமண பந்த உறவு மூலம் வரக்கூடிய கணவனின் உறவுகளிடம் தான் அவளுக்கு அதிக பாசம் உண்டாகும். பிறந்த வீட்டையும், வளர்ந்த சூழலையும் விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு கணவன் மட்டும் பண்புள்ளவராய், அனுசரித்துச் செல்பவராய் அமைந்து விட்டால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதற்கு ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம். 

நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே. 

7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார். 

7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.

7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.

பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார். 

7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார். 

7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார். 

7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும். 

நல்ல கணவர் அமையும் பெண்ணின் வாழ்க்கையானது இனிமையானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும். அதுவே கணவன் நல்லவராக அமையாவிட்டால் அவளின் வாழ்க்கையே நாசமாகிவிடும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் முடிந்தவரை போராடி வெற்றி காணுங்கள்.

காதல் திருமணம், கலப்புத் திருமணம்:


காதல் திருமணத்தில் மதம், இனம் மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் இதில் ஏற்றத்தாழ்விற்கோ, பிரிவினைக்கோ இடம் இருக்காது. இப்படி காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும். என பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 5,7ல் சனி, ராகு, கேது போன்ற  பாவிகள் இருந்தாலும், 7ம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும், பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறம்.

பொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7ம் அதிபதியும் சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும். 

பெண்களுக்கு கணவர் சொந்தத்திலா? அசலிலா?

ஒவ்வொரு பெண்ணுமே தனக்கு வரக்கூடிய கணவர் இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என பல கனவுகளை காண்பார்கள். பழங்காலத்தில் எல்லாம் தம்முடைய பெண்ணை வெளி இடங்களில் கொடுக்காமல் தாய் வழி உறவுகளிலோ, தந்தை வழி உறவுகளிலோ தான் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் வாழையடி வாழ¬யாக நம் இனம், மதம் தழைக்கும் !  சொத்துக்களும் வெளியே சொல்லாது என்பது அவர்களின் நம்பிக்கை.

சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே இவள் என் மருமகள் என முன்பதிவு செய்து வைத்து விடுபவர்களும் உண்டு. இப்படி சொந்தத்திற்குள்ளேயே திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு யாருக்கு அமையும் என பார்க்கும் போது 5,9 ம் வீடுகளில் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் வீட்டில் புதன் பகவான் சுப சாரம் பெற்று வலுவாக அமையப்பெற்றால் 7ம் அதிபதி புதனாக இருந்தாலும் தாய்மாமனை மணக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  7ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று சுபசாரத்துடன் குரு போன்ற சுப கிரகப் பார்வைப் பெற்றிருந்தால், தந்தை வழி உறவில் திருமணம் நடைபெறும். 7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன்  பலமாக இருந்தோ, 7ம் அதிபதியாகி பலம் பெற்றோ சுப பார்வையுடனிருந்தால் தாய் வழியில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 5,9 ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்து, 7ல் சுப கிரகங்கள் அமைகின்றபோது  சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ மண வாழ்க்கை உண்டாகும். ஒரு சில பாவக்கிரகங்கள் 7ல் அமைந்திருந்தாலும், 7ம் வீட்டிற்கு சுபபார்வை இருந்தால் பருவ வயதில் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் ஜாதகி பிறந்த ஜாதியிலேயே தூரத்து சொந்தத்தில் திருமணம் நடைபெறும்.

பெண்களின் கட்டில் சுகவாழ்வு:

பெண்களின் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தியாக கட்டில் சுகமும் அவசியமான ஒன்றாகிறது. நிம்மதியான உறக்கமும் அதில் ஒன்றாகிறது. பெண்களின் ஜாதகத்தில் 12ம் அதிபதி பலமாக அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் நிம்மதியான உறக்கம், தாம்பத்ய வாழ்வில் திருப்தியடையும் நிலை உண்டாகிறது. அதுவே 12ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் சரியாக உறங்க முடியாத நிலை, தாம்பத்ய வாழ்வில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.

பெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்

எந்தவொரு பெண்ணுமே தனக்கு அமையக்கூடிய மணவாழ்க்கையானது சீரும், சிறப்போடும், கணவனின் அன்போடும் மகிழ்ச்சியாக அமைவதைத்தான் விரும்புவாள். 

பெண்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், சுக்கிரன், செவ்வாயும் கிரகச் சேர்க்கையின்றி சுபர்பார்வையுடன் பலமாக அமையப் பெற்றால், மணவாழ்க்கையானது சிறப்பாக இருக்கும். ஆகவே 7ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகச் சேர்க்கை இருந்தாலும், மண வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 



கூட்டுத்தொழில் யோகம்

பல கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை கூட்டாக சேர்த்து தொழில் செய்து முன்னேற்றமடைகிறார்கள். அப்படி கூட்டுத் தொழில் செய்வதற்கு மனைவியின் ஜாதகமும் ஒத்து வர வேண்டும்.  பெண்கள் ஜாதகத்தில் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7ம் வீட்டதிபதி தொழில் ஸ்தானமான 10ல் அமையப் பெற்று, 10 ம் அதிபதியுடன் இணைந்து பலமாக இருந்தாலும், 7, 10 க்கு அதிபதிகள் இடம் மாறி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வளமான வாழ்க்கையை அடையமுடியும்.


Comments

Popular posts from this blog

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்: