சொந்தவீடு யோகம்:

சொந்தவீடு யோகம் என்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலி வலை ஆனாலும் தனிவலை வேண்டும். என விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விட வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லோருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடை கூற முடியாது. கற்பனைகள் அனைத்தும் கனவாகவே முடிந்து விடுவதும் உண்டு.

சிலர் சொந்த வீடு கட்ட நினைத்து வங்கியில் கடன் வாங்கி அலைச்சல் பட்டு அதை ஒழுங்காக கட்ட முடியாமல் போதுமாடாசாமி என நினைப்பவர்களும் உண்டு. சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும்  யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த  வீட்டிற்கு  அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இப்படி சொந்த வீட்டுமனை அமைய  ஜாதக ரீதியாக 4ம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும்  உண்டாகும். 4ம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

4  அதிபதியும், 4ம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. 4ம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால்,  ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, 4ம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, 4ம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.
வீட்டின் அமைப்பு

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் 4 ம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட  மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் 4ம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும்.

பொதுவாக சூரியன், கேது 4ம் வீட்டில் இருந்தால் அமையக்கூடிய வீடானது பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும்.

சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும்.

குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உணண்டாகும். 

செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயால் பாதிப்புபள் உண்டாகும்.

சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

யார் மூலம் சொத்து

பூர்வீகச் சொத்து
ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவமானது பூர்வீகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். என்றாலும் பூர்வீக வழியில் அசையா சொத்து யோகம் உண்டாக 4,5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, 4,5 க்கு அதிபதிகள் இணைந்திந்தாலோ, 4,5 க்கு அதிபதிகளிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தாலோ பூர்வீக வழியில் வீடு யோகம் உண்டாகும்.


தந்தை,

நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகனாவார். 9ம் இடம் தந்தை ஸ்தானம் ஆகும். 4,9 க்கு  அதிபதிகள் பலமாக அமைந்து சூரியனும், பலமாக இருந்தால் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். 4,9 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்று இருப்பதும் 4ம் அதிபதி 9ல் 9ம் அதிபதியின் சேர்க்கை பெற்று இருப்பது போன்றவற்றாலும் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகத்தைக் கொடுக்கும்.

தாய்,

நவகிரகங்களில் தாய் காரகன் சந்திரனாவார். ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி பலமாக அமைந்து தாய் காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய் மூலம் அசையாச் சொத்து யோகம் அமையும்.

உடன் பிறந்தோர்,

நவகிரகங்களில் சகோதரகாரகன் செவ்வாய் ஆவார். ஒருவர்  ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ அமைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் பலமான வீடு யோகம் உண்டாகும்.

அதுவே பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்தால், உடன் பிறந்த
சகோதரிகள் மூலம் வீடு யோகம் உண்டாகும்.


திருமணத்தின் மூலம் சொத்து யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7ம் பாவம் திருமண வாழ்வு  பற்றி குறிப்பிடுவதாகும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 4,7 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றிருந்து இருவருக்கு மிடையே பலமான தொடர்பு ஏற்பட்டு இருந்தால்  அதாவது பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, சேர்க்கைப் பெற்றிருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ திருமண பந்தத்தின் மூலம் அசையாச் சொத்து அமையும் யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து கூட்டாக  சொத்துக்கள் வாங்கி மேலும் மேலும் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் பெயரில் சொத்து (பினாமி)

பொதுவாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள பலமான கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களில்தான் வீடு, மனை, அசையாச் சொத்து யோகம் உண்டாகும். சிலருக்கு 4ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலோ, நடைபெறக்கூடிய தசா புத்தி  சாதகமற்று இருந்தாலோ, அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தைச் சொத்தாக மாற்றக்கூடிய யோகம் இருக்காது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஜாகத்தில் எந்த கிரகம் பலமாக அமையப் பெற்றிருக்கின்றதோ, அந்த கிரகத்திற்குரிய நபர்களின் மீது சொத்துக்கள் வாங்கும்போது, அதன்மூலம் அபிவிருத்தி முன்னேற்றம் உண்டாகும்.

சூரியன், குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் தந்தை, குடும்பத்தில் மூத்தவர்கள் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.

செவ்வாய் பலமாக இருந்தால் உடன் பிறந்தவர்கள் பெயரில்  சொத்தும்,

சுக்கிரன், சந்திரன் பலமாக இருந்தால் பெண்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்குவது நல்லது.

புதனிருந்தாலும் உறவினர்கள் பெயரிலோ, தொழில் செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரிலோ முதலீடு செய்வது  நல்லது.

சனி பலமாக இருந்தால் வேலையாட்களால் பலவிதத்தில் ஆதாயம் அடைவார்கள்.

எப்பொழுது சொத்து அமையும்?

ஒருவருக்கு 4ம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய  திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், 4ல் பலமாக அமையப்பெற்ற  கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.

சொத்துக்களால் பிரச்சினை

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6ம் பாவமானது கடன், வம்பு, வழக்குகளை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். பொதுவாக 6ம் அதிபதி 4 ல் அமைந்திருந்தாலும், 4,6 க்கு அதிபதிகள்  இணைந்து இருந்தாலும், 6ம் அதிபதியின் சாரம் பெற்று 4ம் அதிபதி இருந்தாலும் சொத்துக்களால் பிரச்சினை, வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் உண்டாகும்.

வீடு, மனை யோகம் இல்லாத அமைப்பு

ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 6,8,12 ல் மறைவுப் பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்தவீடு அமைய தடை உண்டாகும். 4ம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் வீடு, அசையா சொத்துக்கள் அமையாது.

வண்டி, வாகனம் யோகம்

நடைமுறை வாழ்க்கையே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசர கதியில் நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோதான் பயன்படுத்துகிறார்கள். நடந்து செல்வதற்கு பாதைகள் இல்லை என்பது வேறு விஷயம் என்றாலும் வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதை பேஷனாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள். செல்ல வேண்டிய இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் பணிகளை எளிதாக முடிப்பதற்கும், அலைச்சலைக் குறைப்பதற்கும் சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது எளிய முறையாக உள்ளது.  இப்படி சொந்தமாக  வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. அதற்கு ஜோதிட ரீதியாக 4ம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த  கிரகங்களின் சேர்க்கையால் சொந்த வண்டி, வாகன யோகம் உண்டாகும் என்று பார்ப்போமா?

நவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 4 பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும்.

4ம் அதிபதி லக்னாதிபதி சந்திரன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இத்துடன் சுக்கிரனும் இணைந்து பலமாக அமையப் பெற்றால் சொகுசான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

4,9 க்கு அதிபதிகள் இணைந்து உடன் குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலம் பெற்றிருந்தால் நான்கு சக்கரம் வாங்கும் யோகம், மதிப்பு மிக்க உயர்பதவிகளால் அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் யோகம் உண்டாகும்.

அது போல 4ம் அதிபதி 9,10 க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்று குரு பார்வைப் பெற்றால் உயர்ரக வாகன யோகம் உண்டாகும்.  4,9 க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஜாதகருக்கு வலிமையான வாகன யோகம் உண்டாவது மட்டுமின்றி செல்வம், செல்வாக்கு உயரும்.

4ம் அதிபதியும் சுக்கிரனும் சுபர் பார்வையுடன் வலுவாக இருந்தால் வலிமையான வண்டி, வாகன யோகம் உண்டாகும். அதுவே பாவிகள் பார்வையுடனிருந்தால் வாகனங்கள் அமைந்தாலும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு இடையூறுகள், நாளடைவில் பழுதடையக்கூடிய நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனுடன் இருந்து கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2,11 லிலோ இருந்தால் பலவகையில் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்தில் 4ம் அதிபதி அமையப் பெற்று குருபார்வைப் பெற்றால் வலிமையான வாகன யோகம் உண்டாகும்.

4 ம்  அதிபதி பகை பெற்றாலோ, நீசம் பெற்றாலோ 6,8,12 ல் மறைந்திருந்தாலோ ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வாகனங்கள் வாங்க இடையூறுகள் உண்டாகும்.

அது மட்டுமின்றி வாகனங்களை அனுபவிக்கவும் தடைகள் ஏற்படும். அது போல  சுக்கிரன் நீசம் பெற்றாலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையில்லாமலிருந்தால் வாகனங்கள் அமைய இடையூறுகள்,
அப்படி அமைந்தாலும் அதன் மூலம் விபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி வலுவாக அமையப்பெற்று உடன் புதன் பலமாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதிக்கும் சுக்கிரனுக்கும் சனியின் சம்மந்தமிருந்தால் புதிய  வாகனத்தை வாங்குவதைவிட  பழைய வாகனங்களை வாங்கி புதுப்பித்து அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

அதுபோல 4ம் இடம் சனியின் வீடாக இருந்தாலும். சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கும், சனி திசை நடைபெறுவபவர்களுக்கும் பழைய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பொதுவாக 4ம் அதிபதியின் திசை அல்லது புத்தியிலோ, சந்திரன், சுக்கிரனின் திசை அல்லது புத்தியிலோ 4ல் அமையக்கூடிய கிரகங்களின் திசை அல்லது புத்தியிலோ பலமான வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

அது போல 4ம் அதிபதியும், சுக்கிரனும் அமைந்துள்ள வீட்டிற்கு திரிகோணத்தில் குரு கோட்சாரத்தில் வரும் போது வாகன யோகம் உண்டாகும்.

சுகவாழ்வு, சொகுசு வாழ்வு:

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏழை முதல் பணக்காரர் வரை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதையே விரும்புவார்கள். மனிதனின் ஆசைக்கும், அபிலாஷைகளுக்கும் அளவுதான் ஏது? நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்ல ஆசை, பைக்கில் செல்பவருக்கு காரில் செல்ல ஆசை, காரில் செல்பவருக்கு விமானத்தில் செல்ல ஆசை. இப்படி சொகுசுவாழ்வு வாழ விரும்புவதை ஆசைகளாய் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவரும் உண்டு. உழைக்காமலே உயரவேண்டும் என்ற பேராசை பிடித்தவர்களும் உண்டு.

சிலர் சுகவாழ்வு வாழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டும் தன்னைச் சுற்றி பத்து வேலையாட்கள் எப்போதும் கைகட்டி நிற்பதாக நினைத்து வாழ்பவரும் உண்டு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைத்து வாழ்வதே சுகமான வாழ்க்கையாகும். வரும்போது எதைக் கொண்டு வந்தோம். போகும் போது எதைக் கொண்டு செல்வோம் என யாரும் நினைப்பதே இல்லை. இருக்கும் வரை சுகவாழ்வு வாழ்வதையே  விரும்புவார்கள். சரி எல்லோருக்குமே சுகவாழ்வு, சொகு-சு வாழ்வு அமையுமா?

அதுதான் இல்லை!  எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும், நாயிடம் கிடைத்த தேங்காய் போல தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் இருப்பவர்களும் உண்டு. ஜோதிடத்தின் மூலமாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு, அவரின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதைப் பற்றி தெளிவாக அறியலாம். 4 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். அதுபோல 4ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதி சுப கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம்  இருக்காது. 4ம் அதிபதி நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு மேன்மையடையும்.

அதுவே 4ம் அதிபதி பகை பெற்றோ, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். 4ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பாவிகள் சூழ்ந்திருந்தாலும் நற்பலன்கள் உண்டாகாது. பொதுவாக 4ம் வீட்டில் என்ன கிரகம் இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியன்

ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலருக்கு இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு ஓரளவுக்கு மேன்மை ஏற்படும்.

சந்திரன்

4ல் சந்திரன் இருந்தால் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன யோகம், இல்லறத்துணையுடன் சுகபோக வாழ்க்கை போன்ற நற்பலன்கள் யாவும் அமையும். அசைவ உணவில் நாட்டம், அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு மற்றும் நல்ல கற்பனை வளம் இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும்.

செவ்வாய்

4ம் வீட்டில் செவ்வாய் பலத்துடன் அமையப் பெற்றிருந்தால் பூமி, மனை யோகம் உண்டாகும். நிலபுலன்களால் நல்ல வருவாய் அமையும். உடன் பிறந்தவர்களாலும் உன்னதமான உயர்வுகள் ஏற்படும். சற்று முன்கோபமும் பேச்சில் வேகம், விவேகமும் நிறைந்திருப்பதால் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். உடலில் வெட்டுக் காயங்கள் உண்டாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு நன்றாகவே அமையும்.

புதன்

4ல் புதன் பலம் பெற்று அமையப் பெற்றால், நல்ல அறிவாற்றல் கொண்டவராகவும் பல்வேறு கலைகளில் ஈடுபாட்டுடனும் இருப்பார். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வார். சுகபோக வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை எளிதில் அமையும். நவீனகரமான பொருட்சேர்க்கைகளும், அசையும், அசையாச் சொத்து யோகங்களும் சிறப்பாக அமையும்.

குரு

4ம் வீட்டில் குருபகவான் பலம் பெற்று கிரக சேர்க்கையுடன் அமைந்திருப்பதால் மற்றவர்களை வழி நடத்தும் யோகம், நல்ல புத்திக் கூர்மை, பல்வேறு பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை யாவும் உண்டாகும். பூமி மனை யோகம், சுகபோக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

சுக்கிரன்

4ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்று அமையப் பெற்றால் நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலங்கள் ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பெண்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். நவீனகரமான வீடு, வண்டி, வாகனங்கள் அமையும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு யாவும் மிகச் சிறப்பாக அமையும்.

சனி

4ல் சனி அமையப்பெற்றால் பழைய வீடு வாங்கம் யோகம், பழைய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வை அனுபவிக்க சில தடைகள் ஏற்படும்.

ராகு

சாயாகிரகமான ராகு 4ல் இருந்தால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அதை அனுபவிக்க தடைகள் ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். மதம் மாறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ராகு சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றாலும், எதிர்பாராத வகையில் நற்பலன்களும் அசையாச் சொத்து யோகமும் உண்டாகும்.

கேது

கேது 4 ல் இருந்தால் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார். உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். கேது சுப சேர்க்கை பெற்றிருந்தால், சில தடைகளுக்குப் பிறகு அசையா சொத்து யோகமும் வாழ்வில் ஓரளவுக்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் உண்டாகும்.


Comments

Popular posts from this blog

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

தீர்க்க சுமங்கலி:

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்: